புதன், 14 ஏப்ரல், 2010

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பதில் என்ன?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
த த ஜ பொது செயலாளர் மற்றும் தலைவர் அவர்களுக்கு,


ஏகத்துவத்திற்கு எதிரான எதிர்ப்புகள் எல்லாம் 90 சதம் தமிழக ஊர்களில் காணாமல் போய், பள்ளிகளில் தொழுவதை தடுப்பதற்கு ஆள் இல்லாமல் போய்விட்ட குறையை பூர்த்தி செய்ய நவீன அவதாரம் எடுத்துள்ள ததஜ ஷெய்கு தன் முரீதுகளில் பெரும்பாலோனோரை ஏற்கனவே ஊரின் பொதுப்பள்ளிகளில் தொழுவதிலிருந்தும் பல்வேறு பொருந்தாக் காரணங்களை கூறி தடுத்து வைத்துள்ளார்.

இது ஒருபக்கம் இருந்தாலும் இப்போது தவ்ஹீதின் பெயரால் கட்டப்படும் பள்ளிகளில் தொழுவதிலிருந்தும் தடுக்க தயாராகிவிட்டார்கள்.

எங்கள் ஊர் (கும்பகோணம்) மேலக்காவேரியில் டிஎன்டிஜே இயக்கத்தில் பேச்சாளராக இருந்த அஸ்கர் என்ற சகோதரர் தனது சொந்த பணத்தில் கடந்த மாதம் ஒரு பள்ளியை கட்டினார்.

டிஎன்டிஜே மாநில நிர்வாகிகள் இந்த பள்ளியையும் விட்டு வைக்காமல் அவரிடம் கேட்டுள்ளனர், அவர் எழுதித்தர இயலாது நிர்வகித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

இந்த ஒரே காரணத்திற்காக, இந்த பள்ளி தவ்ஹீத் பள்ளியாக இருந்தும் டிஎன்டிஜேவினர் பள்ளி அருகிலேயே தனியாக ஒரு வீட்டில் தொழுகை நடத்திவருகின்றனர்.

சுன்னத்துல்ஜமாத் பள்ளி, இணை வைக்கும் இமாம் என்ற காரணங்கள் மலையேறி, இன்று டிஎன்டிஜேக்கு சொந்தமான பள்ளியில்தான் தொழுவோம் என்ற நிலைக்கு போய்விட்டார்களே! இவர்களின் இந்த நிலை எந்த குர்ஆன் சுன்னாவிற்கு உட்பட்டதோ தெரியவில்லை. தரீக்காவை விட மத்கபை விட கீழ் நிலைக்கு சென்றுவிட்டார்கள். இவர்கள்தான் உலகம் முழுவதுக்கும் தவ்ஹீதை எத்திவைப்பவர்களாம்???


இது பற்றி ஒரு சகோதரர் கேட்ட கேள்வியை உங்களுக்கு அனுப்பி தருகிறேன். விளக்கம் தாருங்கள்.

//தவ்ஹீத் பள்ளிவாசல் பக்கத்தில் இருந்தும் அது தங்கள் சொத்தாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒரு வீட்டில் தொழும் நிலைக்குத் ததஜவினர் சென்றுள்ளது குர்'ஆன், ஹதீஸ் ஒளியில் சரியா?

தங்கள்சொத்தாக உள்ள பள்ளிவாசலில் மட்டும் தான் ததஜவினர் தொழுவர் எனில், வளைகுடாவில் உள்ள ததஜ தொண்டர்களின் கதி? வளைகுடாவில் ததஜ பெயரில்சொத்து வாங்கி அதில் பள்ளி கட்டும் வரை இவர்கள் ஏதாவது வீடுகளில் தான் இணைந்து தொழ வேண்டும். அவ்வாறு செய்ய ததஜ தங்கள் தொண்டர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுமா?

அப்படி வெளியிடாது எனில், தமிழகத்தில் மட்டும் ஏனிந்த இரட்டை நிலைபாடு? அதுவும் அல்லாஹ்வை வணங்கும் தொழுகை விஷயத்தில்?//

....................................................................................................................................................................
TMB குழுமத்தில் வைக்கப் படும் சிலர் சார்ந்த விமர்சனங்களுக்கு உடனே மறுப்பை வெளியிடும் சகோ பீ ஜே அவர்களுக்கு த த ஜ சகோதரர்கள் இந்த மடலையும் அனுப்பி வைத்து அதற்கான விளக்கத்தை அவருடைய இணைய தளத்திலோ அல்லது இந்த குழுமத்திலோ வெளியிட்டால் நல்லது.

டிஸ்கி: நண்பர் அனுப்பிய மின்அஞ்சல் அவரின் வேண்டுகோளின்படி இடுகையிடப்பட்டது

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே ஓட்டையும் போடுங்க. கடிதம் எல்லோரையும் போய் சேரட்டும்.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!



கலைஞருக்கு பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்றும் தி.மு.க. தென் மண்டல செய லாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வெளிப்படையாக பேச... அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று துணை முதல்வர் ஸ்டாலின் நக்கீரனிடம் சொன்ன கருத்தும் உன்னிப்பாக கவனிக் கப்படுகிறது.

இந்த சூழலில் கலைஞர் குடும்பத்தில் முக்கிய உறுப்பினராகவும், தி.மு.க.வின் டெல்லி முகமாகவும் இருக் கின்ற எம்.பி.கனிமொழியின் நிலை என்ன என்பதை அறிய அவரிடம் பேசி னோம். கேள்விகளை முழுமையாக உள் வாங்கி பிறகு தன் பதிலை பதிவு செய்த கனிமொழியின் பேட்டியிலிருந்து...

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரான முட்டுக் கட்டைகள் தொடர்கின்றனவே? மசோதா நிறைவேற தி.மு.க. எடுக்கும் முயற்சி என்ன?

கனிமொழி எம்.பி. : பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா லோக்சபாவில் நிறைவேறுவதற்கு முன் நிறைய சவால் களை சந்திக்க வேண்டியிருக்கும் என்ப தாகத்தான் தெரிகிறது. அதே நேரத்தில் ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறை வேற்றப்பட்ட போது காண் பித்த முனைப் பை இப்போதும் காட்டவேண்டி யது அவசிய மாகிறது. இந்த மசோதா நிறை வேற வேண்டும் என்று தொ டர்ந்து குரல் கொடுத்துவருகிறார் தலைவர் கலைஞர். இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று தன்னை அணுகி பேசுபவர் களிடம் பெண்கள் இடஒதுக்கீடு என்பது எங்களின் கொள்கை ரீதியான முடிவு. இதில் இருந்து நாங்கள் விலக முடியாது என்பதோடு அவர் களிடமும் மசோதா நிறைவேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். மசோதா தொடர்பான கூட் டத்தில் தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட டி.ஆர்.பாலு தலைவரின் கருத்துக்களை வலியுறுத்தி பேசியதோடு மற்ற தலைவர்களிடமும் ஒத்த கருத்தினை உரு வாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். தொடர் முயற்சிகளின் மூலம் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

பொது வாழ்வில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான தனிமனித தாக்குதல்தானே பெண்களை அரசியலில் ஈடுபடவிடாமல் தடுக்கிறது. அரசியலுக்கு வரும் பெண்கள் இதை எப்படி எதிர்கொள்வது?

கனிமொழி எம்.பி. : இந்த பிரச்சனை அரசியலுக்கு வரும் பெண் களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. வீட்டு வாசலை விட்டு வெளியே வேலைக்கு போகின்ற அத்தனை பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. பொதுவெளியில் செயல்படக்கூடிய அத்தனை பெண்களுக்கு எதிராகவும் இந்த சமூகம் அல்லது ஆணாதிக்கம் பயன்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் இந்த தனிமனித தாக்குதல்தான். இதை ஒதுக்கித் தள்ளிட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமே தவிர இதற்கு பதில் கூறிக்கொண்டோ அல்லது இதற்காக பயந்து முடங்கிப்போவதோ கூடாது. எல்லா பெரிய அரசியல் தலைவிகளுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதம்தான் இது. அதனால் பெண்கள் குறிப்பாக அரசியலில் ஈடுபடும் பெண்கள் இவற்றை எல்லாம் கடந்து போக கற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான இந்த தாக்குதலைத்தான் முதல் ஆயுதமாகவும், முடிவான ஆயுதமாகவும், முழுமையான ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஏசுநாதர் சொன்னது போலத்தான்... கல்லெறியும் தகுதி இருப்பவர்கள் எறியலாம். பெண்களுக்கு எதிராக இந்த கல்லை எறியும் யாருக்கும் அந்த கல்லை எறியும் தகுதி இல்லை. எனவே பெண்கள் இதை எல்லாம் புறம் தள்ள வேண்டும்.

செம்மொழி மாநாட்டிற்கு உலகத்தமிழறிஞர்களின் ஆதரவு... குறிப்பாக ஈழத்தமிழ் அறிஞர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது?

கனிமொழி எம்.பி. : ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தம்பிதான் ஆய் வரங்கத்தின் தலைவராக செயல்படுகிறார். அவரை விட ஈழத்தமிழர்கள் மீது அக்கறையும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர் எடுக்கும் முடிவுகளைப் பின்பற்றித்தான் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கமே நடைபெற இருக்கிறது. கிட்டதட்ட 85 தமிழறிஞர்களுக்கு மேல் சிறப்பு விருந்தினர்களாக தலைவர் அழைப்பை ஏற்று வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். 6 ஆயிரத்துக்கும் மேல் கட்டுரைகள் வந்திருக்கிறது. எந்த மாநாட்டுக்கும் வராத அளவிற்கு கட்டுரைகள் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் ஆய்வாளர்களிடம் இருந்து வந்திருக்கிறது என்பதில் இருந்தே கோவை செம்மொழி மாநாட்டிற்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

தொடர் தேர்தல் வெற்றிகளின் மூலம் உறுதியான கட்சியாக இருக்கின்றது தி.மு.க. ஆனால் சமீபகாலமாக நடக்கின்ற நிகழ்வுகள் இந்த உறுதித் தன்மையை குலைத்துவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள் தொண்டர்கள். அவர்களின் கவலையைத் தலைவர்கள் புரிந்துகொண்டிருக் கிறார்களா? கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளிப்படையாகவே அறிவித் திருக்கிறாரே?

கனிமொழி எம்.பி. : சொல் லப்படக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக் கும் நாம் ஒரு அர்த்தம், பரபரப்பு எல்லாம் உருவாக்கிக் கொண்டோம் என்றால் எல்லாமே குழப்பமாகவே நம் கண்களுக்குத் தெரியும். சாதாரணமாக சொல்லப்பட்ட கருத்துக்களை சாதா ரணமாகவே புரிந்துகொள்ளவேண்டும். அதை விடுத்து, சொல்லப்பட்ட வார்த் தையை, சூழலை விட்டு தனியே எடுத்து அர்த்தம் கற்பித்தால் அது பத்திரிகை களுக்கு பரபரப்பு தீனியாக அமையுமே தவிர... உண்மையின் பிரதிபலிப்பாக இருக்காது.

அழகிரி - ஸ்டாலின் இரு வருக்கும் இடையிலான உரசல்கள் பற்றி கலைஞரே வெளிப்படையாக பேசியிருக்கிறாரே?

கனிமொழி எம்.பி.: கட்சிக்கு எது முக்கியம், நான் எதை முக்கியமாக நினைப்பேன் என்பதை இரண்டு பேருமே புரிந்துகொள்ளக் கூடியவர்கள். அதனால் அதன்படி செயல்படுவார்கள் என்ற தன்னுடைய நம்பிக்கையைத்தான் தெரிவித்திருக்கிறார்.

அழகிரியும், ஸ்டாலினும் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்று நக்கீரனில் சொன்னார் கலைஞர். அவரின் வலியை இரண்டு அண்ணன்களும் உணர்ந்திருக்கிறார்கள் என நம்புகிறீர்களா?

கனிமொழி எம்.பி.: எனக்கான வலியை அறியாதவர்கள் அல்ல என்றுதான் தலைவர் சொல்லியிருக்கிறார். அறிந்துகொள்ள வேண்டும் என்ற சொல்லவில்லை. அறிந்தவர்கள் என்று நம்பிக்கையோடு கூறியிருக்கிறார். தலைவருக்கு இருக்கின்ற நம்பிக்கை தி.மு.க.வில் இருக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது.

இரண்டு அண்ணன்களில் உங்க ளிடம் பாசத்தை வெளிப்படுத்துவதில் முதன்மையானவர் யார் என்று நினைக் கிறீர்கள்?

கனிமொழி எம்.பி.: வெளிப்படுத்து வது என்பது வெவ்வேறு விதமாக இருக்கும். இதில் முதன்மையானது, இரண்டாவது என்றெல்லாம் எப்படி வரிசைப் படுத்த முடியும்.

சரி...நீங்கள் விரும்புவது அதிரடி அரசியலையா? அமைதி அரசியலையா?

கனிமொழி எம்.பி.: தலைவர் பல நேரங்களில் அமைதியான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார். பல நேரங்களில் அதிரடியான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார். நான் இரண்டையுமே ரசிக்கிறேன். அவரைப் போலவே இரண்டுவித மாகவும் இருக்கவே விரும்புகிறேன்.

தி.மு.க.வின் டெல்லி முகமாக நீங்கள் அனுப்பி வைக்கப்பட்டீர்கள். உங்களுடைய பணி யை நீங்கள் எந்த அளவு சரியாக செய்திருப்ப தாக நினைக்கி றீர்கள்? நீங்கள் பரபரப்பாக செயல்படுவ தில்லை என் கிற கருத்து உள்ளதே?

கனிமொழி எம்.பி.: எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை, ஒவ்வொரு முறையும் நான் சரியாகவே செய்திருக்கிறேன். இக்கட்டான சூழல்களிலும், தலைவரின் கருத்துக்களை சரியாக செய்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதேநேரத்தில் தலைவருக்கும் அது தெளிவாகத் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்பதை மீடியாவில் வெளிச்சம் போட்டுக் காண்பித்துக் கொள்ள விரும்பியது இல்லை. ஏனென்றால் பல காரியங்கள் மிகுந்த சென்சிட்டிவானதாகவும் இருந்திருக்கிறது. இப்போதும் பெட்ரோல் உயர்வாகட்டும், பெண்கள் இடஒதுக்கீடு ஆகட்டும் எல்லாவற்றிலும் நான் என் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறேன். கட்சிக் கான சந்திப்புகளையும், கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்புகளையும் வெளிச்சம்போட்டு நான்தான் செய்தேன் என்று ஒவ்வொரு முறையும் பறை சாற்றிக்கொள்வது அவசியம் அல்ல என்பது என்னுடைய எண்ணம்.

குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தனக்கு லாபமாக நினைப்பார் முதல்வர் என்கிறாரே சோ?

கனிமொழி எம்.பி. : குழப்பம் தலைவருக்கு லாபமாக போவது என்பது தமிழ்நாட்டிற்கு லாபம்தான். அது சோ போன்றவர்களுக்கு லாபமாகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஏனென்றால் இவரைப் போன்றவர்கள், கலைஞர் குடும்பத்தில் ஏதாவது குழப்பம் வராதா? தி.மு.க.வில் குழப்பம் வராதா? அந்தக் குழப்பத்தை வைத்து குளிர் காயலாமா என்று காத் திருப்பவர்கள். இவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த குழப்பத்தை வைத்து தனக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்காதா என நினைப்பவர்கள் சரியான நேரத் தில் மக்களால் ஒதுக்கப்படுவார்கள். தலைவருக்கும், கட்சிக்கும், நாட்டுக்கும் எது நல்லது என்பதை புரிந்தவர் களாகவே மக்களும், தொண்டர்களும் இருக்கிறார்கள்.

ஸ்டாலினுக்கு துணை முதல்வர், அழகிரிக்கு மத்திய அமைச்சர், திரும்பி வந்த தயாநிதிக்கு கேபினட் என பதவிகள் கொடுத்த கலைஞர் உங்களுக்கு பெரிய பொறுப்புகள் எதுவும் கொடுக்காதது பற்றி வருத்தப்படு கிறீர்களா? விரைவில் ஓய்வு பெறப்போகிறேன் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் உங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து கவலை ஏற்பட்டிருக்கிறதா?

கனிமொழி எம்.பி.: தலைவர் கலைஞர்தான் முழுநேர அரசியலுக்கு வரவேண்டும் என என்னை அழைத்து வந்தார். ராஜ்யசபா எம்.பி. ஆக்கியதும் அவர்தான். எத்தனையோ பேரின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய தலைவரே என்னுடைய எதிர் காலத்தையும் முடிவு செய்வார். அதனால் என் அரசியல் எதிர்காலம் பற்றி நான் எந்தக் கவலையும் படவில்லை

நாப்கின் – சங்கரி

பிள்ளத்தாச்சிப் பெண் மீது எல்லோருக்கும் ஒரு அனுதாபம் உண்டு. என்னைக்கேட்டால் பத்து மாதம் சுமக்கும் துன்பம் (அப்படி சொல்லக் கூடாதோ) ஒரு தடவை இரண்டு தடவையில் முடிந்து விடும். கருத்தரிக்காததனால் மாதம் தோறும் அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே, அதுதான் ஆயுள்தண்டனை.

ஃப்ரீடம், ஸ்டேஃப்ரீ, விஸ்பர் … எல்லா நாப்கின் விளம்பரங்களிலும் துள்ளித் திரியும் பெண்கள்… எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கி, காலையில் முழு உற்சாகத்துடன் சிரித்தபடி படுக்கையிலிருந்து எழும் பெண்கள்…

மெடிக்கல் ஷாப்களின் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த நாப்கின்களை தூரத்திலிருந்தே ஏக்கத்துடன் பார்த்தபடி செல்லும் ஏழைச் சிறுமிகளைப் பார்க்கிறேன். இந்த ஏக்கத்தை நான் அனுபவித்ததில்லை. நான் பருவத்துக்கு வந்த நாளில் இதெல்லாம் இருந்ததா என்றே எனக்குத் தெரியாது.

தாமதமாகப் பூப்பெய்துவது ஏழ்மை பெண்ணுக்கு அளிக்கும் வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். எனக்கு அப்போது வயது 16. அரை வயிறு சோறு. அதுவும் ஒரு நாளைக்கு ஒரு வேளை. அதுவும் நிச்சயமில்லை. பள்ளி இறுதியாண்டு. அரைப் பரீட்சை நெருங்கிய நேரம். என்ன ஏது என்று அப்போது புரியவில்லை. வீட்டில் என்னை வைத்து ஒரு சின்ன கொண்டாட்டம். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

முதல் ஆறு மாதங்களுக்கு வலி எதுவும் இல்லை. அப்புறம் அந்த நாட்களில் உதிரப் போக்கு அதிகமானது. இரண்டு கி.மீ நடந்து பள்ளிக்கூடம் போகவேண்டும். பஸ்ஸுக்கு காசு கிடையாது. காலையில் கிளம்பினால் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும் வரை தாக்குப் பிடிக்கின்ற அளவுக்கு பழந் துணிதான் பாதுகாப்பு. ஈரமான பகுதியைக் கீழே மாற்றி, உலர்ந்த பகுதியை மேலாக மாற்றி மடித்து வைத்துக் கொண்டு நடக்க வேண்டும்.

நல்லவேளையாக அது பெண்கள் பள்ளி. அரசுப் பள்ளியின் கழிப்பிட வசதி பற்றிக் கேட்க வேண்டுமா? தண்ணீர் இருக்காது. 10 நிமிட இடைவெளியில் வகுப்பில் உள்ள எல்லாப் பெண்களும் சென்று வரவேண்டும். இடையில் கேட்டால் டீச்சர் திட்டுவார்களோ என்று பயம். நடந்து வீட்டுக்கு வரும்போது ரத்தக் கசிவினால் ஈரமான துணி இருபக்கத் தொடையையும் உரசிப் புண்ணாக்கி இருக்கும்.

வீட்டுக்கு வந்தால் கழிப்பறை எப்போதும் மூடியே இருக்கும். நீண்ட காம்பவுண்டின் கோடியில் பத்து வீட்டுக்கும் பொதுவாக ஒரு கழிப்பறை. குழாய் கிடையாது. 2,3 முறை வந்து தண்ணீரை எடுத்துப் போக வேண்டும். இரவிலும் போக வேண்டியிருக்கும். வீட்டு ஓனரின் மகன் ஒரு பொறுக்கி. இருட்டில் வந்து மார்பில் கை வைப்பான். துணைக்கு அம்மாவைக் கூப்பிடலாம் என்றால், தம்பியோ தங்கையோ அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டிருப்பார்கள். அப்பாவைக் கூப்பிடலாம். இருந்தாலும் கூச்சம்.

பள்ளி முடிந்து ஐ.டி.ஐ யில் சேர்ந்தேன். இடுப்பெலும்பில் வலி ஆரம்பித்தது. இடுப்பெலும்பின் சுற்று வட்டம் முழுவதும் அதன் நடுப் பகுதியில் ஒரு கம்பியை விட்டுக் குடைவது போன்றிருக்கும். வயிற்றின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் தொடங்கி சிறுநீர்த்துவாரம் வரை அழுத்தும் வலி, தலை பாரம், கண்ணை இமை அழுத்தும். இடையிடையே வாந்தி, 4 நாட்களுக்கு அதிகமான உதிரப்போக்கு, எப்போதும் வாந்தி வருவது போன்ற உணர்வு, சாப்பிடப் பிடிக்காது, சாப்பிடவும் முடியாது, குளிர்ச்சியாக ஒரு சோடாவோ குளிர்பானமோ குடித்தால் கொஞ்சம் இதமாக இருக்கும். முடியாது. வறுமையில் அது ஒரு ஆடம்பரச் செலவு. படுத்துக் கொண்டு அம்மா, அம்மா என்று அரற்றுவேன். உருளுவேன். பரால்கான் மாத்திரை சாப்பிட்டு ஒரிரு மணி நேரங்களில் அரற்றலும் உருளலும் குறைந்து அசையாமல் படுத்து கொஞ்ச நேரம் அரை உறக்கத்திலிருப்பேன். அந்த 4 நாட்கள் முடிந்து விட்டால்.. அதுதான் சுதந்திரம்!

மாத விலக்குக்கு ஒரு வாரம் இருக்கும் போதே பயமாக இருக்கும். வெறுப்பும் விரக்தியும் தோன்றும். ஆனால் யாரிடம் சொல்வது? எங்கே ஓடி ஒளிவது? நாள் நெருங்க நெருங்க செத்துப்போய் விட்டால் நல்லது என்று தோன்றும். வலி குறைந்தவுடன் இன்னும் மூன்று வார காலம் வலியின்றி இருப்போம், அடுத்த முறை வலி வருவதற்குள் செத்துப்போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

அம்மாவுடன் ஈ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு போனேன். இந்த வலிக்கு மருந்தில்லை, கல்யாணமானால் சரியாகி விடும் என்றார் டாக்டர். திருமணம் என்றால் மாலைதானே போடுகிறார்கள், அந்த மாலையை இப்போதே போட்டுக் கொண்டால்? அந்த அளவுக்குத்தான் அன்றைக்கு விவரம் தெரியும். அதையும் அம்மாவிடம் சொல்ல பயம்.

மாதங்கள் செல்லச் செல்ல உபத்திரவம் அதிகரித்தது. நான் படித்தது பெண்களுக்கான ஐ.டி.ஐ தான் என்றாலும் சில பாடங்களுக்கு ஆண் லெக்சரர்கள் வருவார்கள். ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்புக்கு ஆங்கில லெக்சரர் வருவதற்குள் கழிவறைக்குச் சென்று வந்துவிட எண்ணி அவசரமாய் வெளியேறினேன். அப்போதும் துணி தான் உபயோகம். துணி நழுவிக் கீழே விழுந்தது. லெக்சரரின் கண்ணிலிருந்து அது தப்பியிருக்காது. கூசிப்போனேன்.

1977, 78 இருக்கும். சானிட்டரி நாப்கின் பற்றி அப்போது வாரப் பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறேன். வகுப்பில் கொஞ்சம் வசதியான பெண்களும் இருந்தனர். தோழி சாரதாவிடம் கேட்டதற்கு எலாஸ்டிக் பெல்ட் தாங்கி நிற்கும் நாப்கின் இருப்பதாகச் சொன்னாள். வீட்டில் காசு கேட்க முடியாது. வீட்டிலிருந்தது கல்லூரிக்கு வர இரண்டு பஸ் மாற வேண்டும். மொத்தம் 7 கி.மீ தூரம். ஒரு பஸ்ஸுக்கு மட்டும்தான் வீட்டில் காசு தருவார்கள். டிக்கெட் விலை 25 பைசா. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி மொத்த தூரத்தையும் நடந்து காசு சேர்த்தேன். அதில் பெல்ட் தாங்கி நிற்கும் நாப்கினை சாரதா வாங்கித் தந்தாள். துணியை ஒப்பிடுகையில் மிகவும் மெலிதாக பார்க்க அழகாக இருந்தது. முதல் முறை உபயோகித்து பத்திரமாக உறையில் சுற்றி வீட்டுக்கு எடுத்து வந்தேன். இவ்வளவு சுலபமான வழி நமக்கு தெரியவில்லையே என்ற நினைத்துக் கொண்டேன். சோப் போட்டுக் கசக்கினேன். நாப்கின் துண்டு துண்டானது.

யூஸ் அண்டு த்ரோவெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஒரு நாள் சுதந்திரத்தின் விலை எத்தனை கிலோ மீட்டர் நடை? இப்போது நினைத்தாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.

படிப்பு முடிந்து ஒரு எலக்ட்ரிகல் சாமான் கடையில் வேலை. மாதம் 100 ரூபாய் சம்பளம். தம்பி தங்கைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு நிச்சயம் ஆனது. எனக்கு அளவு கடந்த நிம்மதி. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை. வீட்டிலிருந்து கடை 5 கி.மீ. தூரம். மாதத்தின் முதல் 10 நாட்கள் பஸ்ஸில். மீதி நாட்கள் நடை. எனது நெருங்கிய தோழியும் அங்கு வேலைக்கு சேர்ந்தாள். துணைக்கு ஆள் வந்தது எனக்கு பெரிய பலம் போல இருந்தது. காலையிலும் சரி, மாலையிலும் சரி, ஒரு டீ குடிக்க வேண்டும் என்றால், ஓனர் சொல்வாரா என்று காத்திருக்க வேண்டும். டீ சொல்வதும் சொல்லாததும் வாங்கி வரச்சொல்லும் நேரமும் அவர்களது மூடைப் பொறுத்தது. மாத விலக்கு சமயத்தில் தொண்டையும் நாக்கும் உலர்ந்து ஒரு டீ கிடைக்காதா என்று தவிக்கும்.

இந்த சமயம் பார்த்து ஸ்டாக் எடுக்கும் வேலையும் வரும். ஏணியில் ஏறி, உயரமான ஷெல்ஃபுகளில் இருக்கும் பொருட்களை இறக்கி, எண்ணி எழுதி தூசி தட்டி வைக்க வேண்டும். எத்தனை முறை ஏறி இறங்குவது? நானும் அவளும் சேர்ந்து தான் செய்வோம். வலி உயிர் போகும். ஸ்டாக் எடுக்கும் வேலையை ஆண்களைச் செய்யச் சொல்லுங்கள் என்று அவள் ஓனரிடம் ஒருநாள் தைரியமாக சொல்லி விட்டாள். அவள் சம்பளத்தை நம்பி குடும்பம் இல்லை. எனக்கோ தம்பி தங்கைகளை நினைத்தால் தைரியம் வராது.

ஒரு நீளமான பழைய வீட்டைத்தான் கடைக்காக வாடகைக்கு எடுத்திருந்தார்கள். கழிவறைக்கு மேலே மேலே கூரை கிடையாது. நின்றால் பக்கத்து மாடி வீடு, கடைகளில் உள்ளவர்களுக்குப் பார்க்க முடியும். அங்கும் தண்ணீர்ப் பிரச்சினை. மாத விலக்கின் இரண்டாம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் லீவு போட வேண்டாம். மற்ற நாட்களாக இருக்கும் பட்சத்தில் லீவு போடுவேன். ஓனர் கோபமாகக் கேள்வி கேட்பார். அழுவதற்கு என் தன்மானம் இடம் கொடுத்ததில்லை. வேலை செய்து கொண்டு அழுகையை அடக்கிக் கொள்வேன். ஒரு நாள் இரண்டாவது பார்ட்னரின் மனைவி கடைக்கு வந்தார். வசதியான குடும்பத்திலிருந்து வந்தாலும் மனிதாபிமானி. நான் ரொம்பவும் சோர்ந்திருப்பதைப் பார்தது, “ஏன் இப்படி இருக்கிறாய்” எனக் கேட்டார். “என்ன செய்வது, செத்துப்போய் விட வேண்டும் என்று தான் நினைக்கிறேன், ஆனால் சாக முடியவில்லை” என்று சொல்லி விட்டேன். அப்போது எனக்கு வயது 20. மிகவும் வருத்தப்பட்டார்.

ஒரு பெண் டாக்டரிடம் அழைத்துப் போனார். மருந்துகள் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. “வலி நிவாரணிகள் தவிர வேறு வழி இல்லை, வேறு சில மருந்துகள் உள்ளன, ஆனால் அதையெல்லாம் தொடர்ந்து உபயோகித்தால் வேறு பக்க விளைவு வரும். திருமணமானால் படிப்படியாக சரியாகி விடும்” என்றார். அன்று திருமணம் என் தேவையாக இல்லை. குடும்ப நிலைமை அப்படி. “கர்ப்பப் பையை எடுத்து விட்டால் இந்தப்பிரச்சினை இருக்காது என்கிறார்களே டாக்டர், செய்வீர்களா” என்றேன். “இந்த வயதில் அதைச் செய்ய முடியாதும்மா” என்றார் சோகம் கலந்த புன்னகையுடன். அப்புறம் நான் டாக்டரை பார்ப்பதில்லை. நான் லீவு போட்டால் ஓனரும் என்னைத் திட்டுவதில்லை.

அப்புறம் கொஞ்சம் நல்ல வேலை கிடைத்தது. எனினும் நாப்கின் வாங்கும் அளவு வசதி கூடிவிடவில்லை. துணிக்கு பதிலாக கட்டுக்கட்டாக பஞ்சு. வலி நீடித்தாலும், தொடை உரசிப் புண்ணாவது பெரிதும் குறைந்தது. அன்று அதுவே பெரிய சந்தோஷம்.

பின்னர் திருமணம். அந்த நாட்களில் நான் பட்ட வேதனையைப் பார்த்து அவரது கண்ணில் நீர் வழிந்தது. வலியை மறக்கும் அளவுக்கு அதுவே சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. இரண்டாவது மாதம் சற்றே சோகமாக இருந்தார். மூன்றாவது மாதம் அந்த சமயத்தில் சினிமாவுக்குக் கிளம்பி விட்டார். கேட்டதற்கு “ஆமாம், உனக்கு வலியாக இருக்கும்போது நான் என்ன செய்வது? நானாவது சினிமாவுக்குப் போய் பொழுதுபோக்கிக் கொள்கிறேன்” என்றார். துக்கம் தொண்டையை அடைத்தது. என் வலியை அவரால் வாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் அவர் இது போன்றொரு அவஸ்தையிலிருக்கும்போது நான் சந்தோஷம் தேட நினைத்திருப்பேனா?

வலியுடன் இரவு நேரத்தில் வாந்தி வருவதும் வாடிக்கையாகியிருந்தது. திருமணத்துக்கு முன் அம்மாவோ, தம்பியோ, தங்கையோ வந்து முதுகை நீவி விடுவார்கள். முடிந்தவுடன் கொஞ்சம் வெந்நீர் கொடுப்பார்கள். இதமாக இருக்கும். ஒருநாள் இரவில் வாந்தி வந்தது. நடுநிசி. அவரை எழுப்பி விட்டு அவசரமாக பாத்ரூமுக்கு ஓடினேன். வாந்தி எடுக்கும்போது முதுகை நீவிவிடும் கை இல்லை. திரும்பி வந்தேன். நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். மனம் கனத்தது. நாம் கூப்பிட்டது கூடத் தெரியாமல் அசந்து தூங்குகிறார் என்று சமாதானப் படுத்திக்கொண்டேன். “நான் கூப்பிட்டது கூடத் தெரியாமல் அசந்து தூங்கி விட்டீர்களா?” என்று கேட்டு விட்டு ஆமாம் என்ற பதிலுக்காக காத்திருந்தேன். “நான் தூக்கத்தை விட்டு வருமளவிற்கு இது என்ன பிரச்சினை, எப்பவும் வரும் வாந்தி தானே” என்றார். வலித்தது. இந்த மாதிரியான வலிகளும் கூட பெண்களுக்கே உரியவை. இல்லையா?

அவர் கொடுமையான ஆணாதிக்கவாதியெல்லாம் இல்லை. மனைவியின் குடும்பத்தையும் தன் குடும்பமாக நினைத்து உதவும் அளவுக்கு நல்லவர். கை நீட்டாதவர். இருந்தாலும்.. எப்போதாவது சொற்களால் மட்டுமே சுடுகின்ற சராசரி ஆண். நான் சொன்ன சம்பவம் ஆண்களின் மனதைத் தொடுமா என்று தெரியவில்லை. சின்ன உதாசீனங்களை நான் பெரிது படுத்துவதாகக் கூட நினைக்கலாம். ஆனால் ஒரு தலைவலியைச் சமாளிப்பதற்குக் கூட மனைவியின் துணையைத் தேடும் ஆண்கள், வீக்கர் செக்ஸ் என்று பெண்களை சொல்கிறார்களே, சிரிப்புதான் வருகிறது.

இதைப் படிக்கின்ற ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் சிலருக்கும் கூட கொஞ்சம் அலுப்பாக இருக்கலாம். இன்றைய நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு ‘ஃப்ரீடம்’ இருக்கிறது. எனவே ‘கேர் ஃப்ரீ’ யாகவும் இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் சாதாரண ஏழைப்பெண்களுக்கு இது பிரச்சினைதான். இதை பெண்ணின் பிரச்சினை என்று சொல்வதா, ஏழையின் பிரச்சினை என்று சொல்வதா தெரியவில்லை.

குறிப்பிட்ட நாட்களில் லீவு போட்டால், ஆண்களின் ஏளனமான சிரிப்பு, இதை சாக்கு வைத்துக் கொண்டு வேலையை தட்டிக் கழிக்கிறார்கள் என்று கிண்டல், கடமையை வலியுறுத்தும் மேலதிகாரிகள், அவர்களிடம் தனது பிரச்சினையைச் சொல்வதற்கு தன்மானம் இடம் கொடுக்காததால் தவிக்கும் பெண் ஊழியர்கள்… நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் கூட அன்றாடம் இதையெல்லாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமீபத்திய தினமணியில் பார்த்தேன். இந்தியாவில் 65 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது என்று ஒரு கட்டுரை. கிராமமோ நகரமோ, காலைக் கடனைக் கழிப்பதற்கே விடிவதற்கு முன் பெண்கள் புதர்களைத் தேடி ஓட வேண்டும். பிறகு இருட்டும் வரையில் காத்திருக்க வேண்டும்.

பொறுக்க முடியாத வலி என்பது என்னைப் போன்ற சில பெண்களைப் பிடித்த சாபக்கேடு. ஆனால் அந்த நாட்களின் உதிரப்போக்கும், களைப்பும் பெண்கள் அனைவருக்கும் உடன் பிறந்தவை. தாங்க முடியாத போது இப்போதெல்லாம் நான் லீவு போட்டு விடுகிறேன். அலுவலகத்தில் தரமான பாத்ரூம் இருக்கிறது. எனக்கு வாழ்க்கை மாறியிருக்கிறது.

ஆனால் வீட்டு வேலை செய்யும் பெண்கள், கடைகளில் நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கும் பெண்கள், கார்ப்பரேசன் பள்ளிகளின் படிக்கும் சிறுமிகள்.. இவர்கள் யாருக்கும் வாழ்க்கை மாறவில்லை. என்னைப் போல இவர்கள் விவரம் தெரியாத அசடுகள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். பெண்களுக்கு ‘ஃப்ரீடம்’ இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த ‘ஃப்ரீடம்’ தங்கள் கைக்கு எட்டாது என்பதும் புரிந்திருக்கும்.

இடுப்பு எலும்பைக் குடையும் அந்த வலியுடன் நாப்கின் வாங்குவதற்காக போன மாதம் கடையில் நின்று கொண்டிருந்தேன். சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு 16 வயதுச் சிறுமி கலவைக்கு ஜல்லி அள்ளிக் கொண்டிருந்தாள். கறுப்பான பொலிவான முகம். கொஞ்சம் சாயம் போன பாலியெஸ்டர் பட்டு பாவாடை சட்டை. வயசுக்கு வந்ததைக் கொண்டாட வாங்கித் தந்ததாக இருக்குமோ? நானும் அந்த நாளில் இப்படி ஏதோ ஒரு புதுப் பாவாடை சட்டை போட்ட ஞாபகம்.

கருங்கல் ஜல்லியை சட்டியில் அள்ளிப்போட்டு விட்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். தூக்கி விட ஆள் இல்லை. அவள் யாரையும் கூப்பிடவும் இல்லை. உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு அந்தச் சட்டியைத் தூக்கினாள். எனக்குச் சுரீர் என்று வலித்தது.

அழுகையை அடக்கிக் கொண்டு, எலக்டிரிகல் கடையில் ஏணியில் ஏறி ஸ்டாக் எடுத்த அந்த நாள், நினைவுக்கு வந்தது. கல்லைக் கொட்டிவிட்டு அடுத்த நடைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். பார்த்தேன். கொஞ்சம் கர்வமாகவும் இருந்தது.

நன்றி - வினவு

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

முதன்முதலாய் அம்மாவுக்கு - வைரமுத்து


ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் போனேனோ?

பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே

வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு

கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணியாள வந்திருக்கும்?
தாசில்தார் இவன்தானோ?

இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும

கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே

தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிடே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
க்டைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே

எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேற பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

.

தமிழகத்தின் மகா கோடீஸ்வரர் கலாநிதி மாறன்!



பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.

உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.

இந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி!

இந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.

இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.

அந்த 49 பெருங்கோடீஸ்வரர்கள்...!

உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.

அம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).

இந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.

1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.

இவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.

இந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்

தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.

44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.

தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.

மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.

சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.

அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.

பெருகும் பணக்காரர்கள்...

இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.

அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.

அங்காடி தெரு - ஆனந்த விகடன் விமர்சனம்


தமிழகத்தின் மலிவு விலைச் சாலையான ரெங்கநாதன் தெருவின் பகட்டுப் பளபளப்புகளுக்குப் பின் பல்லிளிக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்... 'அங்காடித் தெரு'! மதுரை, அருவாள், குத்துப் பாட்டு, வட்டார பாஷை, கிளைமாக்ஸ் சோகங்கள்தான் யதார்த்த சினிமா என்பதை உடைத்து நொறுக்கி இருக்கும் அங்காடித் தெரு, உழைப்பு நிறைந்த நிறைவான படைப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தின் வறண்ட கிராமத்தில் வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (அறிமுகம்). அப்பாவின் திடீர் மரணம், ரெங்கநாதன் தெரு 'செந்தில் முருகன் ஸ்டோர்' வேலைக்குத் துரத்து கிறது.

கனவுகளுடன் வருபவர்களுக்குக் காத்திருக்கிறது, கொத்தடிமைக் கொடூரம். மென்னியை முறிக்கும் வேலைப் பளு, ஒவ்வொரு நிமிடத் தாமதத்துக்கும் ஒரு ரூபாய் சம்பளப் பிடித்தம், சிறைக் கொட்டடி போன்ற தங்கும் இடம், கணக்கற்ற அடி உதை என உயிரைப் பிழியும் சேல்ஸ் வேலை.

அந்த மூர்க்கத் தருணங்களில் தென்றலாக ஆறுதல் தருகிறது சக தொழிலாளி அஞ்சலி (கனி)யின் அன்பு. நாளைடைவில் அது காதல் வடிவம் எடுக்க, அதை அனுமதிக்க மறுக்கிறது அந்தப் பணிச் சூழல். கொடூரமான வாழ்வியல் சூழலில் இருந்து தப்பித்து அழகான வாழ்க்கையை அமைக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு அங்காடித் தெரு அனுமதித்ததா என்பதே கதை!

படம் முழுக்க இரண்டே வித ஆடைகள், ஒரே தெரு, சில பல மனிதர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுபூர்வமாகக் கதையை நகர்த்தியிருப்பது இயக்குநர் வசந்தபாலனின் தன்னம்பிக்கைத் தைரியம். மகேஷ் 'அறிமுகம்' என்றால் நம்புவதற்குச் சிரமம். கிராமத்து ஏழை இளைஞனாக, கொத்தடிமைத் தொழிலாளியாகப் பச்சக்கெனப் பதிகிறார்.


'நான் யோசிச்சேன்னுதான்டி நீ சந்தேகப்பட்டே.. நம்மளை மாதிரி ஆட்கள் வாழ்க்கை முழுக்க யோசிச்சுக்கிட்டேதான் இருக்கணும்!'என்று அன்பும் ஆக்ரோஷமுமாகப் பொங்குகிற இடத்தில் அவ்வளவு முதிர்ச்சி உணர்ச்சிகள்.

'கற்றது தமிழ்' ஆனந்தியாகக் கொள்ளைகொண்ட பிறகு, 'அங்காடித் தெரு' கனியாக இது அஞ்சலிக்கு அழுத்தமான முத்திரை. அதட்டல், மிரட்டல், கெஞ்சல் கலந்து கண்களை உருட்டுவதாகட்டும், அடிப்பதற்கு முன்னரே 'ஐயோ அம்மா..!' என்று துள்ளுவதாகட்டும் குறுகுறு குறும்பு. அதே சமயம் 'மாரைப் பிடிச்சு அழுத்தினான்... நான் எதுவும் பேசாம நின்னேன்!' என்று மகேஷிடம் வெடித்துவிட்டு, 'இதே டிசைன்ல மெரூன் கலரா? இருக்குக்கா...' என்று கண்ணீர் மறைத்து உதடு கடித்து வாடிக்கையாளரிடம் இயல்பாகப் பேசும் இடத்தில்... தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நாயகி!


'ராகுகாலத்தில பொறந்தவனே!' என்று அப்பா திட்ட, 'நீருல்லாவே நேரம் பார்த்திருக்கணும்' என்று பதிலடி கொடுக்கத் தொடங்கி, படம் நெடுகப் பட்டாசு வெடிக்கிறார் 'கனாக் காணும் காலங்கள்' பாண்டி.

லட்டுத் தட்டினால் சாத்தும்போது, 'அப்படிப் போடுடா சபாசு!' என்று பார்வையாளர்கள் ஆவேசமாகக் கைதட்டுவது கருங்காலி கங்காணியாக நடித்திருக்கும் இயக்குநர் ஏ.வெங்கடேசுக்குக் கிடைத்திருக்கும் டிஸ்டிங்ஷன் சான்றிதழ்.

தற்கொலைக்கு முன் தன் காதல் பொய்த்த வேதனையை வெளிப்படுத்தும் இடத்தில் செல்வராணி முகத்தில் எரிமலைவிம்மல்கள்.

சோபியா, சௌந்தரபாண்டி, குள்ளராக வருபவர், அவரது மனைவி, பேப்பர் பொறுக்கும் பெரியவர், கைக்குட்டை விற்கும் பார்வையற்றவர், இலவசக் கழிப்பறையைக் கட்டணக் கழிப்பறையாக மாற்றிப் பிழைக்கும் இளைஞர் என அங்காடித் தெரு முழுக்க நடமாடும் சின்னச் சின்ன கேரக்டர்களிலும் அவ்வளவு வாழ்வின் துளிகள்.

ஜவுளிக் கடல்களின் கொத்தடிமைக் கொடூரம் முகத்தில் அறைந்தாலும், சில காட்சிகள் 'இப்படில்லாம்கூடவா நடக்கும்?' என்ற அளவுக்கு மிகைப்படுத்தல் தொனிப்பதைத் தவிர்த்திருக்கலாம். முதல் காட்சியிலேயே லாரி விபத்து கடந்துவிடுவதால், பிறகு அது ஏற்படுத்த வேண்டிய அதிர்ச்சித் தாக்கம் இல்லாமல் போய்விடுகிறது.

'நீ யாருன்னு என் தங்கச்சி கேட்டுட்டே இருந்தா', 'நீ என்ன சொன்னே?', 'சிரிச்சேன்', என ஜெயமோகனின் வசனம் படத்துக்குப் பெரும் பலம். 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை', 'உன் பேரைச் சொல்லும்போதே' பாடல்களில் இசை ஈர்க்கிறது.

நெரிசல்மிக்க, புழுக்கம் நிறைந்த ரெங்கநாதன் தெருவுக்குள் நாம் ஊடாடும் பிம்பத்தை உண்டாக்கும் அறிமுக ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதனின் கேமரா, போகிறபோக்கில் எக்கச்சக்க மனிதர்களை, அவர்களின் உணர்வுகளை, சென்னை வாழ்க்கையைத் தூவிக் கொண்டே இருக்கிறது.

குழந்தை தன் கணவன்போலவே ஊனமாகப் பிறக்க கடவுளை வேண்டிக் கொள்ளும் முன்னாள் பாலியல் தொழிலாளி, அஞ்சலியின் தங்கைக்குச் சடங்கு செய்யத் தீட்டு கிடையாது என்று வரவேற்கும் ஆலயம், அண்ணாச்சியின் 'காக்க காக்க' செல்போன் ரிங்டோன், தற்கொலை செய்துகொள்ளும் செல்வராணியின் ரோஷம், அதிகாரத்தின் விளிம்பு வரை பாயும் மாமூல் பணம், பிளாட்ஃபாரத்தில் படுத்து உறங்கும் கொத்து வேலைத் தொழிலாளிகள் என்று மினுமினு சென்னையின் இருட்டுப் பக்கத்தைக்கொண்டு செதுக்கப்பட்டு இருக்கும் வசந்தபாலனின் அங்காடித் தெரு,

தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளத் தெரு!

நன்றி -விகடன் விமர்சனக் குழு