செவ்வாய், 6 ஏப்ரல், 2010

அங்காடி தெரு - ஆனந்த விகடன் விமர்சனம்


தமிழகத்தின் மலிவு விலைச் சாலையான ரெங்கநாதன் தெருவின் பகட்டுப் பளபளப்புகளுக்குப் பின் பல்லிளிக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்... 'அங்காடித் தெரு'! மதுரை, அருவாள், குத்துப் பாட்டு, வட்டார பாஷை, கிளைமாக்ஸ் சோகங்கள்தான் யதார்த்த சினிமா என்பதை உடைத்து நொறுக்கி இருக்கும் அங்காடித் தெரு, உழைப்பு நிறைந்த நிறைவான படைப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தின் வறண்ட கிராமத்தில் வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (அறிமுகம்). அப்பாவின் திடீர் மரணம், ரெங்கநாதன் தெரு 'செந்தில் முருகன் ஸ்டோர்' வேலைக்குத் துரத்து கிறது.

கனவுகளுடன் வருபவர்களுக்குக் காத்திருக்கிறது, கொத்தடிமைக் கொடூரம். மென்னியை முறிக்கும் வேலைப் பளு, ஒவ்வொரு நிமிடத் தாமதத்துக்கும் ஒரு ரூபாய் சம்பளப் பிடித்தம், சிறைக் கொட்டடி போன்ற தங்கும் இடம், கணக்கற்ற அடி உதை என உயிரைப் பிழியும் சேல்ஸ் வேலை.

அந்த மூர்க்கத் தருணங்களில் தென்றலாக ஆறுதல் தருகிறது சக தொழிலாளி அஞ்சலி (கனி)யின் அன்பு. நாளைடைவில் அது காதல் வடிவம் எடுக்க, அதை அனுமதிக்க மறுக்கிறது அந்தப் பணிச் சூழல். கொடூரமான வாழ்வியல் சூழலில் இருந்து தப்பித்து அழகான வாழ்க்கையை அமைக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு அங்காடித் தெரு அனுமதித்ததா என்பதே கதை!

படம் முழுக்க இரண்டே வித ஆடைகள், ஒரே தெரு, சில பல மனிதர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுபூர்வமாகக் கதையை நகர்த்தியிருப்பது இயக்குநர் வசந்தபாலனின் தன்னம்பிக்கைத் தைரியம். மகேஷ் 'அறிமுகம்' என்றால் நம்புவதற்குச் சிரமம். கிராமத்து ஏழை இளைஞனாக, கொத்தடிமைத் தொழிலாளியாகப் பச்சக்கெனப் பதிகிறார்.


'நான் யோசிச்சேன்னுதான்டி நீ சந்தேகப்பட்டே.. நம்மளை மாதிரி ஆட்கள் வாழ்க்கை முழுக்க யோசிச்சுக்கிட்டேதான் இருக்கணும்!'என்று அன்பும் ஆக்ரோஷமுமாகப் பொங்குகிற இடத்தில் அவ்வளவு முதிர்ச்சி உணர்ச்சிகள்.

'கற்றது தமிழ்' ஆனந்தியாகக் கொள்ளைகொண்ட பிறகு, 'அங்காடித் தெரு' கனியாக இது அஞ்சலிக்கு அழுத்தமான முத்திரை. அதட்டல், மிரட்டல், கெஞ்சல் கலந்து கண்களை உருட்டுவதாகட்டும், அடிப்பதற்கு முன்னரே 'ஐயோ அம்மா..!' என்று துள்ளுவதாகட்டும் குறுகுறு குறும்பு. அதே சமயம் 'மாரைப் பிடிச்சு அழுத்தினான்... நான் எதுவும் பேசாம நின்னேன்!' என்று மகேஷிடம் வெடித்துவிட்டு, 'இதே டிசைன்ல மெரூன் கலரா? இருக்குக்கா...' என்று கண்ணீர் மறைத்து உதடு கடித்து வாடிக்கையாளரிடம் இயல்பாகப் பேசும் இடத்தில்... தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நாயகி!


'ராகுகாலத்தில பொறந்தவனே!' என்று அப்பா திட்ட, 'நீருல்லாவே நேரம் பார்த்திருக்கணும்' என்று பதிலடி கொடுக்கத் தொடங்கி, படம் நெடுகப் பட்டாசு வெடிக்கிறார் 'கனாக் காணும் காலங்கள்' பாண்டி.

லட்டுத் தட்டினால் சாத்தும்போது, 'அப்படிப் போடுடா சபாசு!' என்று பார்வையாளர்கள் ஆவேசமாகக் கைதட்டுவது கருங்காலி கங்காணியாக நடித்திருக்கும் இயக்குநர் ஏ.வெங்கடேசுக்குக் கிடைத்திருக்கும் டிஸ்டிங்ஷன் சான்றிதழ்.

தற்கொலைக்கு முன் தன் காதல் பொய்த்த வேதனையை வெளிப்படுத்தும் இடத்தில் செல்வராணி முகத்தில் எரிமலைவிம்மல்கள்.

சோபியா, சௌந்தரபாண்டி, குள்ளராக வருபவர், அவரது மனைவி, பேப்பர் பொறுக்கும் பெரியவர், கைக்குட்டை விற்கும் பார்வையற்றவர், இலவசக் கழிப்பறையைக் கட்டணக் கழிப்பறையாக மாற்றிப் பிழைக்கும் இளைஞர் என அங்காடித் தெரு முழுக்க நடமாடும் சின்னச் சின்ன கேரக்டர்களிலும் அவ்வளவு வாழ்வின் துளிகள்.

ஜவுளிக் கடல்களின் கொத்தடிமைக் கொடூரம் முகத்தில் அறைந்தாலும், சில காட்சிகள் 'இப்படில்லாம்கூடவா நடக்கும்?' என்ற அளவுக்கு மிகைப்படுத்தல் தொனிப்பதைத் தவிர்த்திருக்கலாம். முதல் காட்சியிலேயே லாரி விபத்து கடந்துவிடுவதால், பிறகு அது ஏற்படுத்த வேண்டிய அதிர்ச்சித் தாக்கம் இல்லாமல் போய்விடுகிறது.

'நீ யாருன்னு என் தங்கச்சி கேட்டுட்டே இருந்தா', 'நீ என்ன சொன்னே?', 'சிரிச்சேன்', என ஜெயமோகனின் வசனம் படத்துக்குப் பெரும் பலம். 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை', 'உன் பேரைச் சொல்லும்போதே' பாடல்களில் இசை ஈர்க்கிறது.

நெரிசல்மிக்க, புழுக்கம் நிறைந்த ரெங்கநாதன் தெருவுக்குள் நாம் ஊடாடும் பிம்பத்தை உண்டாக்கும் அறிமுக ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதனின் கேமரா, போகிறபோக்கில் எக்கச்சக்க மனிதர்களை, அவர்களின் உணர்வுகளை, சென்னை வாழ்க்கையைத் தூவிக் கொண்டே இருக்கிறது.

குழந்தை தன் கணவன்போலவே ஊனமாகப் பிறக்க கடவுளை வேண்டிக் கொள்ளும் முன்னாள் பாலியல் தொழிலாளி, அஞ்சலியின் தங்கைக்குச் சடங்கு செய்யத் தீட்டு கிடையாது என்று வரவேற்கும் ஆலயம், அண்ணாச்சியின் 'காக்க காக்க' செல்போன் ரிங்டோன், தற்கொலை செய்துகொள்ளும் செல்வராணியின் ரோஷம், அதிகாரத்தின் விளிம்பு வரை பாயும் மாமூல் பணம், பிளாட்ஃபாரத்தில் படுத்து உறங்கும் கொத்து வேலைத் தொழிலாளிகள் என்று மினுமினு சென்னையின் இருட்டுப் பக்கத்தைக்கொண்டு செதுக்கப்பட்டு இருக்கும் வசந்தபாலனின் அங்காடித் தெரு,

தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளத் தெரு!

நன்றி -விகடன் விமர்சனக் குழு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக