செவ்வாய், 6 ஏப்ரல், 2010

முதன்முதலாய் அம்மாவுக்கு - வைரமுத்து


ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் போனேனோ?

பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே

வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு

கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணியாள வந்திருக்கும்?
தாசில்தார் இவன்தானோ?

இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும

கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே

தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிடே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
க்டைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே

எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேற பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக